அரவணை இருப்பு குறைந்ததால் வினியோகத்தில் கட்டுப்பாடு

சபரிமலை: சபரிமலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரவணை டின்களின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து வினியோகத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்தருக்கு 20 டின் மட்டுமே வழங்கப்படுகிறது.

நவ.16- மண்டல சீசன் தொடங்கிய போது 60 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்ய வேண்டும் என்று தேவசம்போர்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 45 லட்சம் டின் அரவணை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

மண்டல சீசன் தொடங்கிய நாள்முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அரவணை விற்பனையும் பல மடங்கு அதிகரித்தது. சில நாட்களில் நான்கு லட்சம் டின் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் இருப்பு வேகமாக குறைந்து 10 லட்சமாக சுருங்கியதால் விற்பனையில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்தருக்கு 20 டின் அரவணை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அதனை வாங்குவதற்கான கியூ நீள்கிறது.

தற்போது தினமும் 2.80 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அதற்கும் மேலாக விற்பனை நடைபெறுவதால் இருப்பு குறைந்து வருகிறது. எனினும் அரவணை தட்டுப்பாடு வராது என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement