வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு

டாக்கா: மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஒஸ்மன் ஹாதியின் மரணத்திற்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தான் பொறுப்பு என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


அடுத்தாண்டு, பிப்., 12ல் வங்கதேச பார்லிமென்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர், அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன.


ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, தீவிர இந்திய எதிர்ப்பாளராவார்.


சுட்டுக்கொல்லப்பட்ட ஹாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ''யாருக்கும் தலை வணங்க மாட்டோம் என்ற ஓஸ்மான் ஹாதியின் அரசியல் பாதையை ஏற்று, அதை தலைமுறைகளுக்கு கடத்த உறுதியேற்போம்,'' என பேசினார்.


இந்த நிலையில், ஹாதியை அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தான் கொலை செய்ததாக ஷெரீப் ஓஸ்மான் ஹாதி குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


மேலும், அவர்கள் கூறியதாவது; நீங்கள் (முகமது யூனுஸ்) தான் ஓஸ்மான் ஹாதியின் கொலைக்கு காரணம். அவரை பாதுகாக்க தவறிய அரசு தான் பொறுப்பு. ஹாதியின் மரணத்திற்கு பிறகு, வரவிருக்கும் பொதுத் தேர்தல்களைச் சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பிறகு நிறைய அரசியல் காரணங்கள் உள்ளன. தற்போது, அவரது மரணத்தை ஒரு பிரச்னையாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார், இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement