ஜீவகாருண்யத்திற்கு முளைத்த சிறகுகள்

சாதாரணமாக விமானங்கள் மனிதர்களையும், வணிகச் சரக்குகளையும் சுமந்து செல்வதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள கல்பேப்பர் விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்தச் சிறிய விமானம், பல டஜன் செல்லப்பிராணிகளைச் சுமந்து வந்தது. அந்த விமானத்தை இயக்கி வந்தவர், விலங்குகளின் உற்ற நண்பரான ஜெர்ரி ஸ்டீபன்ஸ்.
Latest Tamil News
யார் இந்த ஜெர்ரி ஸ்டீபன்ஸ்?

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெர்ரி ஸ்டீபன்ஸ் ஒரு தன்னார்வ விமானி. விலங்குகள் மீது கொண்ட தீராத அன்பினால், 'பிலாட்ஸ் என் பாவ்ஸ்' போன்ற அமைப்புகளுடன் இணைந்து இப்பணியைச் செய்கிறார். மறைந்த தனது நண்பரின் நினைவாக 'சியூக்ஸ் ஆர்மி' என்ற பெயரில் இந்த மீட்புப் பயணங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
Latest Tamil News
அமெரிக்காவின் தென் மாநிலங்களான ஜார்ஜியா, அலபாமா போன்ற இடங்களில் உள்ள விலங்குகள் காப்பகங்களில் இடநெருக்கடி ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. அங்குள்ள பிராணிகள் இடவசதி இல்லாத காரணத்தால் 'கருணைக் கொலை' செய்யப்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தடுக்க, ஜெர்ரி அந்தப் பிராணிகளை மீட்டு, அவை தத்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள வடக்கு மாநிலங்களுக்குத் தனது சொந்த விமானத்தில் கொண்டு செல்கிறார். சாலை மார்க்கமாகப் பயணிக்கும்போது பிராணிகள் அடையும் மன அழுத்தத்தைக் குறைக்க, இவரது இந்த 'வான்வழிப் பாலம்' ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
Latest Tamil News
ஜெர்ரி இந்தப் பணியைத் தொழிலாகச் செய்யவில்லை. இதற்காக அவர் யாரிடமும் பணம் பெறுவதில்லை. எரிபொருள் செலவு, பராமரிப்பு என அனைத்தையும் அவரும், அவரது மனைவி சிட்னியும் தங்கள் சொந்த வருமானத்திலிருந்தே மேற்கொள்கின்றனர்.
Latest Tamil News
விமானத்திலிருந்து இறங்கிய ஜெர்ரியின் முகத்தில் களைப்பை விட, பல உயிர்களைக் காப்பாற்றிய திருப்தியே மேலோங்கி நின்றது. "ஒவ்வொரு முறை விமானம் தரையிறங்கும்போதும், எனக்குள் ஒரு பெரிய நிம்மதி பிறக்கிறது. இந்தப் பிராணிகளுக்கு இனி ஒரு புதிய வாழ்வும், அன்பான குடும்பமும் கிடைக்கும் என்பதுதான் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெகுமதி" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
Latest Tamil News
விலங்குகளின் நலனுக்காகத் தன் நேரத்தையும், செல்வத்தையும் செலவிடும் ஜெர்ரி ஸ்டீபன்ஸின் இந்தப் பயணம், இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான சிறந்த உதாரணமாகும்

-எல்.முருகராஜ்

Advertisement