எம்.பி.ஏ., பட்டதாரி கொலை விரோதத்தால் டிரைவர் வெறி

மேட்டூர்: எம்.பி.ஏ., பட்டதாரியை கட்டையால் அடித்துக் கொன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், பாலவாடியை சேர்ந்தவர் செல்வகுமார், 38; எம்.பி.ஏ., பட்டதாரி. சென்னை ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

தம்பதி தகராறில், 10 ஆண்டுகளுக்கு முன் கவிதா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன், செல்வகுமார் வெளியூரில் இருந்த நேரத்தில், கவிதா, அவரது சகோதரர் முறை உறவினரான டிரைவர் பொன்குமார், 33, செல்வகுமார் வீட்டு பூட்டை உடைத்து, கவிதா, குழந்தைகளின் உடைமைகளை எடுத்துச் சென்றனர்.

பின், 2022 மே மாதம் ஊர் திரும்பிய செல்வகுமார், தன் உறவினரான டிரைவர் குமார், 30, என்பவரை அழைத்துச் சென்று, பொன்குமாரை அடித்துக் கொலை செய்தார். கொளத்துார் போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வந்த செல்வகுமார், குமார் இருவரும் தினமும் மது அருந்தி, சுற்றித் திரிந்தனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் கொளத்துார் பஸ் ஸ்டாப் அருகே கோழிக்கடையில் மது அருந்திய போது, வக்கீலுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அங்கிருந்த கட்டையால், செல்வகுமாரின் தலையில் அடித்தார் குமார். இதில், சம்பவ இடத்திலேயே செல்வகுமார் இறந்தார். கொளத்துார் போலீசார், குமாரை கைது செய்தனர்.

Advertisement