கம்யூ., போராட்டத்தால் பணிந்த ஜம்பை டவுன் பஞ்., நிர்வாகம்

பவானி: ஜம்பை டவுன் பஞ்., வாய்க்கால்பாளையத்தில், அடிப்படை வசதி கேட்டு பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இ.கம்யூ., சார்பில் கிளை செயலாளர் தங்கராசு தலைமையில், 30க்கும் மேற்பட்டோர், வாய்க்கால்பாளையம் பெரியார் நகர், விநாயகர் கோவில் முன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் நகர் பகுதியில் சாலையை மறித்து நிறுத்தப்பட்டுள்ள மின் கம்பத்தை இடம் மாற்றி அமைக்க வேண்டும். நிறுத்தப்பட்ட கான்கிரீட் வீதி பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற வடிகால் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஜம்பை டவுன் பஞ்., (பொறுப்பு) செயல் அலுவலர் பாலாஜி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பவானி போலீசார் சென்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதையடுத்து சாக்கடை வசதி செய்ய, நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து பணி தொடங்கியது.

Advertisement