மஹாராஷ்டிரா டி.ஜி.பி., ஆகிறார் என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த்

புதுடில்லி: என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் சதானந்த் வசந்த் ததே, 59, மஹாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளார்.


மஹாராஷ்டிரா மாநிலத்தின், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான சதானந்த் வசந்த் ததே அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தார்.

வீர தீர விருது



கடந்த 2008ல், மும்பையில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, தன் போலீஸ் படையுடன் துணிச்சலாக செயல்பட்டார். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தை பயங்கரவாதிகள் தாக்கிய போது, ததே தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.


உடனே, பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப், இஸ்மாயில் ஆகியோர் காமா மருத்துவமனை பகுதிக்கு தப்பிச் சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற ததே, மருத்துவமனை வளாகத்தில் துணிச்சலாக முன்னேறினார். அப்போது பயங்கரவாதிகள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசினர். அதில், ததே மிக கடுமையாக காயமடைந்தார் .


ஆனாலும், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி விடாதபடி அவர்களை நோக்கி தொடர்ந்து துப்பாக்கியால் அவர் சுட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேல் பயங்கரவாதிகளுடன் போராடிய அவர், அதிக ரத்தத்தை இழந்து மயங்கி விழுந்தார். போலீஸ் படையினர் விரைந்து வந்து ததேவை மீட்டனர். அவரின் துணிச்சலான செயலை பாராட்டி, அவருக்கு ஜனாதிபதியின் வீர தீர விருது வழங்கப்பட்டது.


ஒப்புதல்



சி.பி.ஐ., மற்றும் சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி உள்ள ததே, என்.ஐ.ஏ., தலைவராக கடந்தாண்டு நியமிக்கப்பட்டார். அவர், 2026 டிச., 31 வரை இப்பொறுப்பில் இருப்பார் என கூறப்பட்டது.


இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில காவல் துறையின், டி.ஜி.பி.,யாக ததே நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, சதானந்த் வசந்த் ததேவை அவரின் மாநில பணிக்கே திருப்பி அனுப்ப, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

Advertisement