தேச விரோதியா?
'எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால், இந்த பா.ஜ.,வினர் முட்டுக்கட்டை போடுகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற மம்தா, நான்காவது முறையாகவும் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என, சபதம் எடுத் துள்ளார்.
சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர்வதற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளார். மம்தா தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினரின் ஓட்டுகளே காரணம் என, பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர்.
'அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, ஏராளமானோர் மேற்கு வங்கத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர். இவர்களுக்கு மேற்கு வங்கத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன.
'இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகத் தான், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. ஆனால், மம்தா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிக்கும் மம்தா, நம் நாட்டுக்கு எதிரானவர்...' என, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மம்தாவோ, 'நாட்டு மக்களிடம் என்னை தேச விரோதியாக சித்தரிக்கும் பா.ஜ.,வினருக்கு, இந்த தேர்தலில் முடிவு கட்டுவேன்...' என, ஆவேசப்படுகிறார்.