நடிகர் வீட்டில் திருடியவர் கைது ரூ.65 லட்சம் நகைகள் மீட்பு

ஜே.பி.நகர்: சின்னத்திரை நடிகர் பிரவீன் வீட்டில் நகை திருடியவர், ஒன்பது மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.

பெங்களூரு ஜே.பி.நகர், 20வது மெயின் ரோட்டில் வசிப்பவர், கன்னட சின்னத்திரை நடிகர் பிரவீன். கடந்த மார்ச் மாதம், 13ம் தேதி பிரவீனும், அவரது மனைவியும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள், கள்ளச்சாவி பயன்படுத்தி பிரவீன் வீட்டு கதவை திறந்தனர். பீரோவில் இருந்த தங்க செயின், நான்கு மோதிரங்கள், கம்மல்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து பிரவீன் அளித்த புகாரில், ஜே.பி.நகர் போலீசார் விசாரித்தனர்.

ஆனாலும், நகை திருடியவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தொழில்நுட்ப அடிப்படையில் விசாரணை தொடர்ந்தது.

ஒன்பது மாதங்களுக்கு பின், பிரவீன் வீட்டில் திருடிய சாராயிபாளையாவில் வசிக்கும் முகமது கான், 45 என்பவர், தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து, 478 கிராம் தங்க கட்டிகள், நகைகள், ஒரு கிலோ 550 கிராம் வெள்ளி பொருட்கள், 4.60 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு பைக் மீட்கப்பட்டது. இவற்றின் மதிப்பு, 65.28 லட்சம் ரூபாயாகும்.

கைதான முகமது கானுக்கு, மாலை கண் நோய் இருந்து உள்ளது. இரவில் அவருக்கு கண் தெரியாது என்பதால், பகலில் மட்டுமே திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் கைதானாதன் மூலம் ஏழு திருட்டு வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது.

Advertisement