பா.ஜ., செயல் தலைவர் நிதின் நபின் தயவால் விஜயேந்திரா தப்புவாரா?

- நமது நிருபர் -

பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தயவால், கர்நாடக பா.ஜ., தலைவர் தப்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இரண்டாவது மகன் விஜயேந்திரா, 46. இரண்டு ஆண்டுகளாக கர்நாடக பா.ஜ., தலைவராக பணியாற்றி வருகிறார்.

இளம் வயதில் கட்சியின் தலைவர் பதவி இவருக்கு கிடைத்ததால், கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள், அதிருப்தி அடைந்தனர். விஜயேந்திராவின் தலைமையின் கீழ் பணியாற்ற மாட்டோம் என்றும் போர்க்கொடி துாக்கினர்.

குறிப்பாக, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில் ஒரு அணி உருவானது. அந்த அணியில் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ், முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

எத்னால் நீக்கம் இந்த அணியினர் விஜயேந்திராவுக்கு எதிராக அடிக்கடி ஆலோசனை நடத்தியதுடன், அவர் மீது கட்சி மேலிட தலைவர்களிடம் புகாரும் தெரிவித்தனர்.

தனது செல்வாக்கை பயன்படுத்தி, கட்சிக்கு எதிராக பேசியதாக கூறி, பசனகவுடா பாட்டீல் எத்னாலை கட்சியில் இருந்து நீக்க வைத்தார் விஜயேந்திரா.

இனியாவது தனக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள் என்று நினைத்திருந்தார். ஆனால், ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் செயல்படும் அதிருப்தி அணி, அடிக்கடி டில்லி சென்று அவரை பற்றி மேலிடத்திடம் புகார் தெரிவிக்கிறது.

தற்போதைய பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம், விஜயேந்திரா மீது புகார் தெரிவிக்க, அதிருப்தி அணிக்கு இன்னும் நேரடி வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேநேரம் மூத்த மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோரிடம், காங்கிரசுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு, விஜயேந்திரா என்னென்ன செய்கிறார் என்று கூறி வந்தனர்.

தலைவருக்கு ஐஸ் நட்டாவின் தலைவர் பதவிக்காலம், தற்போது நீட்டிப்பில் சென்று கொண்டு இருக்கிறது. புதிய தலைவரை தேர்வு செய்யும் நோக்கில், கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின், 46 தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பீஹார் அமைச்சரான இவர், தேசிய அரசியலுக்கு புதுமுகமாக உள்ளார்.

தின் நபின் தேர்வு ஆனதால், விஜயேந்திரா குஷி அடைந்தார். உடனடியாக டில்லி சென்று அவரை சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறினார்.

தனது, 'எக்ஸ்' பக்கத்தில், இளம் தலைவர் வழிகாட்டுதலின் கீழ் கட்சி இயங்க உள்ளது. இதுதான் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று பதிவிட்டு, 'ஐஸ்' வைத்தார்.

தனது பதவியை காப்பாற்றி கொள்வது பற்றியும், நிதின் நபினிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதிருப்தி அணியினர், புதிய தேசிய செயல் தலைவரை சந்திப்பற்குள் முந்தி கொண்டு விஜயேந்திரா சென்று உள்ளது, அவரது அரசியல் சாமர்த்தியத்தை காட்டுகிறது. இந்தச் செயல், அவரது தந்தை எடியூரப்பா யோசனையின் பேரில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அதிருப்தி அணியினரும் சும்மா இருக்க மாட்டார்கள். வரும் நாட்களில், நிதின் நபினை சந்தித்து, விஜயேந்திராவை பற்றி போட்டு கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஆனாலும், இளம் தலைவர் என்ற முறையில். விஜயேந்திராவுக்கு நிதின் நபின் ஆதரவு கிடைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தயவால், தலைவர் பதவியில் நீடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

Advertisement