வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவில் கவர்னர் கையெழுத்திடுவாரா?

- நமது நிருபர் -


வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவை அமல்படுத்த, கர்நாடக அரசு காத்திருக்கிறது. ஆனால், இந்த மசோதாவை கவர்னர் நிராகரிக்கலாம். அதன் வாயிலாக, கவர்னர் - மாநில அரசு கவர்னர் இடையே பனிப்போர் நடக்கலாம்.

பொதுக்கூட்ட மேடைகளில் பேசும் போது, சர்ச்சையாக பேசுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், காங்கிரஸ் அரசு, 'வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா'வை, பெலகாவியில் நடந்த, சட்டசபையின் குளிர்க்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை மீறி நிறைவேற்றியது.

அடுத்த கட்டமாக, இம்மசோதாவை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்ப அரசு தயாராகிறது.

பொய்யான வழக்குகள் கடலோர மாவட்டங்கள் உட்பட கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மதக்கலவரங்களுக்கு, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்களே, முக்கிய காரணமாக இருந்தன.

மதவாத அமைப்புகள், இது போன்று பேசி மக்களை துாண்டுகின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா கொண்டு வருவதாக அரசு தெரிவித்தது.

இதை சட்டமாக அமல்படுத்தினால், எதிரிகள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படலாம். அரசியல் எதிரிகளை பணிய வைக்க, இந்த மசோதாவை அஸ்திரமாக ஆளும் கட்சி பயன்படுத்தலாம் என, பலரும் அஞ்சுகின்றனர்.

மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு இன்று அனுப்பப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, விவாதத்துக்குரிய மசோதா.

பா.ஜ., தலைவர்களை குறி வைத்து, இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக, அக்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போடக்கூடாது என, பா.ஜ., - ம.ஜ.த.,வும் வலியுறுத்தியுள்ளன. மத்திய அமைச்சர் ேஷாபா, ஏற்கனவே கவர்னருக்கு கடிதம் எழுதி, 'எந்த காரணத்தை கொண்டும், மசோதாவில் கையெழுத்திடக்கூடாது' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறுப்பு, தாமதம் ஒரு சமுதாயத்தினரை கவரும் நோக்கில், மற்றொரு சமுதாயத்தை குறி வைத்து மசோதா வகுக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் கையெழுத்திட வேண்டாம் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றன.

மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, நிர்ணயித்த காலத்துக்குள் கையெழுத்திடும்படி, கவர்னருக்கு உத்தரவிட முடியாது என, உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளது.

இதை அஸ்திரமாக பயன்படுத்தி, வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவில் கையெழுத்திட கவர்னர் மறுக்கவோ, தாமதிக்கவோ செய்யலாம்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா, இன்று லோக் பவனுக்கு (முந்தைய ராஜ்பவன்) அனுப்பப்படலாம்.

சில சட்ட சிக்கல்களை முன் வைத்து, அரசிடம் கவர்னர் விளக்கம் கேட்கக்கூடும். ஏற்கனவே பல மசோதாக்களை கவர்னர் கையெழுத்திடாமல் அரசுக்கு அனுப்பிய உதாரணங்கள் உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா விஷயத்தில், விதான்சவுதா மற்றும் லோக்பவன் இடையே, மற்றொரு பனிப்போர் நடக்கும் வாய்ப்புள்ளது.

Advertisement