மேம்பாலத்தால் வந்த வில்லங்கம்; எப்போது விமோசனம்; போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் சென்னிமலை நகரம்

சென்னிமலை: பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக காங்கேயம் வரை குறுகிய சாலையில், அதிக எண்ணிக்கையில் பயணிக்கும் வாகனங்களால், சென்னிமலை நகர வாசிகள் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.


சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில், 25 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களுக்கு, எங்கோ அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையால் சிக்கல் தேடி வந்தது. இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் இதன் வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.


அதாவது தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட மூன்று இடங்களில் டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டும். இவற்றை தவிர்க்க ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன. அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை-பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் ரோடு, குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.


இந்த வழியாக பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் உயிரை கையில் பிடித்தபடி செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகளால் அடிக்கடி விபத்து, உயிரிழப்பும் ஏற்படுகிறது. படையெடுத்து செல்லும் கனரக வாகனங்களால், சாலையும் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் சேதமாகி, டூவீலர்களில் செல்வோரை விபத்தில் சிக்க வைக்கிறது.


காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறை அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்துக்கு டூவீலர் அல்லது அல்லது காரில், காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு, இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும். சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தீர்வாக, சென்னிமலை நகருக்கு லாரிகள் வருவதை தவிர்க்க, ரிங்ரோடு அமைக்க சென்னிமலை நகர வாசிகள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரிங்ரோடு அமைக்க முடிவு செய்து நிலம் அளவீடு பணி தொடங்கியது. அதுவே இன்னும் முடியவில்லை.


நிலம் கையகப்படுத்த அறிவிப்பு கொடுத்த நிலையில் உள்ளது. ஆரம்பக்கட்ட சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, விரைந்து சென்னிமலை ரிங் ரோடு அமைக்கும் பணிய தொடங்க, சென்னிமலை நகர வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement