மயான ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கறுப்பு கொடி கட்டி போராட்டம்


ஆத்துார்: ஆத்துார், கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்து, கீழ் தொம்பை மலைக்கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கான மயான பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் எழுந்தது. கடந்த நவ., 20ல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் வழங்கியும், அடுத்த கட்ட நடவடிக்கை இல்லை.

இதுதொடர்பாக கடந்த, 5ல் நடந்த பேச்சில், 8ல் நில அளவீடு செய்து, 11ல் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கூறினர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து, கீழ்தொம்பை மலைவாழ் மக்கள், அவர்களது வீடு, தெரு, சாலைகளில், நேற்று கறுப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து ஊரின் மைய பகுதியில், மலைவாழ் மக்கள் சங்கம், மா.கம்யூ., கட்சியினர், காலை, 10:00 மணி முதல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம், 1:00 மணிக்கு, தாசில்தார் பாலாஜி, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயலட்சுமி, மல்லியக்கரை போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறி, ஆவணங்களை காட்டினர். பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement