போரக்ஸ்: நிலைபெற்று வரும் ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, கடந்த வாரம் 91 என்ற வரலாற்றுசரிவை நோக்கி சென்ற நிலையில், அது தற்போது மெல்ல நிலைபெற்று வருகிறது. சந்தையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க, ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது .
சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரூபாயின் மதிப்பை உறுதிப்படுத்தவும் 3,200 கோடி டாலர் மதிப்பில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதாவது, இந்திய மதிப்பில், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு வங்கிகளிடம் இருந்து அரசு பத்திரங்களை வாங்க இருப்பதாகவும், கிட்டதட்ட 90,000 கோடி ரூபாய்க்கு டாலர்-ரூபாய் ஸ்வாப் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் 4.30 சதவீதம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், அடுத்த ஆண்டில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால், சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு 98க்கு கீழ் சரிந்துள்ளது.
இது, இந்திய ரூபாய் போன்ற வளரும் நாட்டு நாணயங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ரூபாய் மதிப்பு 89.20 என்ற நிலைக்கு மேல் வலுப்பெற்றால், 88.50 என மேலும் உயர வாய்ப்புள்ளது.