24 ஆண்டாக தொடர்ந்து பயணிக்கும் டில்லிமெட்ரோவின் முதல் ரயில்

புதுடில்லி: 23-ஆண்டு கால பயணிகள் சேவையிலும் அயராது தொடர்ந்து 24-வது ஆண்டிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறது. டில்லியின் முதல் மெட்ரோ ரயில்.

இது குறித்து டிஎம்ஆர்சி-இன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் முதன்மை நிர்வாக இயக்குனர் அனுஜ் தயாள் கூறி இருப்பதாவது:டில்லியில் மெட்ரோ ரயில் சேவையை நடத்தி வரும் டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கடந்த 2002 ம் ஆண்டு டிச.,24-ம் தேதி முதன் முறையாக துவங்கப்பட்டது.

தென் கொரியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், கோல்கட்டாவிற்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டு, பின்னர் ரயில் மூலமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டது. நான்கு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் ஆரம்ப விலை சுமார் ரூ. 24 கோடி ஆகும்

டில்லி மெட்ரோநெட்வொர்க்கில் இயக்கப்பட்ட முதல் ரயிலான டிஎஸ்#01என்ற ரயில் இன்றும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இது இந்த அமைப்பின் நீண்ட கால நம்பகத்தன்மையை வலியுறுத்துகிறது.

வளர்ந்து வரும் உலக தரவுகள், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த ரயில் பல ஆண்டுகளாக மேம்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

முதலில் நான்கு பெட்டிகளுடன் ஓடத்துவங்கிய ரயில 2014 ம் ஆண்டில் ஆறு பெட்டிகளாகவும், 2023-ல் எட்டுபெட்டிகளாகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் 2.9 மில்லியன் கி.மீ தூரம் வரையில் பயணித்துள்ளது. சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

இந்த ரயில் அதன் பராமரிப்புக் குழுவால் இரண்டு பெரிய சீரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2024-ல் ரயிலில் மேலும் பல அமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.ஐபி அடிப்படையிலான பயணிகள் அறிவிப்பு , சிசிடிவி கேமராக்கள், ஒருங்கிணைந்த பயணிகள் அவசர அலாரங்கள், எல்சிடி அடிப்படையிலான டைனமிக் ரூட் மேப்கள், புதுப்பிக்கப்பட்ட கதவுகள், தீ கண்டறிதல் அமைப்பு, மேம்படுத்தப்பட்ட ரிலே பேனல்கள், மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயிண்டுகள், ரயிலின் உட்புறங்களில் வண்ணம் தீட்டுதல் போன்ற வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

"சரியான பராமரிப்பு மற்றும் சரியான நேரத்தில் மேம்படுத்தல்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் அதே வேளையில், ரோலிங் ஸ்டாக்கின் ஆயுளை கணிசமாக நீட்டிக்கும் என்பதற்கு டிஎஸ்#01 ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என அனுஜ் தயாள் கூறினார்.

Advertisement