‛'சிக்கந்தர் மலையை' தகர்க்க முடியாது': மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆத்திரம்

17

மதுரை: பா.ஜ., கும்பல் தலைகீழாக நின்று அங்கு சென்றாலும் சிக்கந்தர் மலையை தகர்க்க முடியாது. இந்த சதித்திட்டத்தை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது,'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.


மதுரை நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் நுாறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் இடம் பெற்ற காந்தி பெயரை மாற்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார்.


இதில் சண்முகம் பேசியதாவது: பதினோரு ஆண்டுகளாக இத்திட்டத்தை பா.ஜ., அரசு சீரழித்து வருகிறது. நுாறு நாட்களை அதிகரிக்க வேண்டும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என போராடிவரும் நிலையில் தான் புதிய திருத்தங்களுடன் இந்த திட்டத்தை மத்திய அரசு உள்நோக்கத்துடன் நிறைவேற்றியுள்ளது.


காந்தியை பா.ஜ.,வுக்கு பிடிக்காது. அவர் மீது கொண்டுள்ள வன்மம் தான் 78 ஆண்டுகளுக்கு பின் இந்த பெயர் மாற்றம் சட்டம். வரும்காலத்தில் ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள காந்தி படத்தை கூட நீக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஏற்கனவே நுாறு நாள் திட்டத்தில் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த லட்சணத்தில் எப்படி 125 நாட்களாக செயல்படுத்துவர்.


திருப்பரங்குன்றத்தில் இந்த இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு கூட்டம் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் அது மக்களை பாதிப்பதாக இருந்தால் அமல்படுத்த முடியாது என்ற உறுதியுடன் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


இவ்விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினின் உறுதி பாராட்டத்தக்கது. பா.ஜ., கும்பல் தலைகீழாக நின்று அங்கு சென்றாலும் சிங்கந்தர் மலையை தகர்க்க முடியாது. இந்த சதித்திட்டத்தை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது.இவ்வாறு பேசினார்.

Advertisement