நீதிபதிகள் நியமனத்திற்கு பரிந்துரை;: இடைக்கால தடை கோரி வழக்கு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, நீதிபதிகள் நியமனம் செய்ய, 'கொலீஜியம்' எனும் மூத்த நீதிபதிகள் அடங்கிய தேர்வு குழு பரிந்துரை செய்த பட்டியலுக்கு, இடைக்கால தடை விதிக்க கோரி, வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. இதில், 20 இடங்கள் காலியாக உள்ளன. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வு குழு, 10க்கும் மேற்பட்டோரை நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், பரிந்துரை பட்டியலுக்கு தடை விதிக்கவும், மறு பரிசீலனை செய்யவும் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பிரேம்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
நீதிபதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அனைவரும், அரசியல் பின்னணி கொண்டவர்கள். சிலர் மத்திய அரசு அல்லது மாநில அரசு வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இது, நீதித்துறை தனித்துவத்தையும், பொது மக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும். நீதிபதிகள் நியமனம் என்பது தனிநபர் விருப்பங்களின் அடிப்படையில் அல்ல.
திறமை, நேர்மை மற்றும் அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளின் அடிப்படையிலேயே நீதிபதிகள் தேர்வு இருக்க வேண்டும். எனவே, இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களை, நீதிபதிகளாக நியமனம் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும். பட்டியலை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.