மனைவியை எரித்து மகளை தீயில் தள்ளியவர் தலைமறைவு

ஹைதராபாத்: தெலுங்கானாவில், மனைவியை கணவர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள நலகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 28. இவரது மனைவி திரிவேணி, 26. இந்த தம்பதிக்கு, 6 வயதில் மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், வெங்கடேஷ் திரிவேணியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.


கடந்த 24ம் தேதி தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது திரிவேணியை, குழந்தைகள் கண் எதிரே வெங்கடேஷ் சரமாரியாக உதைத்தார். பின்னர், வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தார். அதை தடுக்க முயன்ற மகளையும், தீயில் தள்ளி விட்டு வெங்கடேஷ் தப்பினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திரிவேணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான வெங்கடேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement