உ.பி., வளர்ச்சியில் கல்கோடியாஸ் பல்கலை முக்கிய பங்காற்றுகிறது: முதல்வர் யோகி பாராட்டு

லக்னோ: ''உலகளவில் உத்தர பிரதேசத்தின் வளர்ச்சியில் கல்கோடியாஸ் பல்கலை சிறந்த பங்களிப்பை அளிக்கிறது,'' என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.


உ.பி.,யின் கிரேட்டர் நொய்டாவில் கல்கோடியாஸ் பல்கலை அமைந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த பல்கலையில் பொறியியல், மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.


ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகரம் லண்டனைச் சேர்ந்த க்யூ.எஸ்., எனப்படும், 'குவாக்கரெல்லி சைமன்ட்ஸ்' ஆய்வு நிறுவனம் மற்றும் 'டைம்ஸ்' உயர் கல்வி நிறுவனங்கள், உலகின் சிறந்த பல்கலைகளின் தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில், கல்கோடியாஸ் பல்கலை முக்கிய இடங்களை பிடித்துள்ளது.


இந்த பல்கலையின் வேந்தர் சுனில் கல்கோடியா, தலைமை செயல் அதிகாரி துருவ் கல்கோடியா மற்றும் பல்கலை அதிகாரிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சமீபத்தில் சந்தித்து உரையாடினார்.


அப்போது, முதல்வர் யோகி பேசியதாவது:
க்யூ.எஸ்., மற்றும் டைம்ஸ் நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றதன் வாயிலாக, உத்தர பிரதேசத்தில் உள்ள பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கு முதன்மை எடுத்துக்காட்டாக கல்கோடியாஸ் பல்கலை விளங்குகிறது. மாநிலத்துக்கு மட்டும் பெருமை சேர்க்காமல், உலகளவிலும் இந்த பல்கலை சிறந்து விளங்குகிறது.


பல்கலை வளாகத்தில் உலகத்தரம் வாய்ந்த கல்விச் சூழலை கல்கோடியாஸ் பல்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் சீரிய பணியால், உலக தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்த உயரத்தை இந்த பல்கலை நிச்சயம் எட்டும்.


சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நான்யாங் தொழில்நுட்ப பல்கலை மற்றும் அதன் 'இன்ஸ்பயர்' நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதன் வாயிலாக, கல்கோடியாஸ் பல்கலையின் கற்பித்தல் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.


ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் பல்கலையின் கண்டுபிடிப்பு திட்டங்கள் பாராட்டத்தக்கவை.


எதிர்காலத்தை மையமாகக் கொண்ட இது போன்ற படிப்புகள், மாணவர்களை உலகளாவிய போட்டிக்கு தயார்படுத்துவது மட்டுமல்லாமல், உத்தர பிரதேசம் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப தன்னம்பிக்கை நோக்கிய பயணத்தை வலுப்படுத்துகிறது-.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement