நோய்வாய்ப்பட்ட பெண்ணை கட்டிலில் துாக்கிச் சென்று சிகிச்சை

1

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பாதை இல்லாததால், நோய்வாய்ப்பட்ட பெண்ணை உறவினர்கள் கட்டிலில் தூக்கிச் சென்றனர்.

-சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி ஊராட்சி அம்மாபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சர்க்கரை 55. மனைவி வெள்ளையம்மாள் 50. நரம்பு பிரச்சனையால் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இவரது மகன் ஜீவரத்தினம், மகள் ஸ்ரீ பிரியா ஆகியோர் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து மீண்டும் தோட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

சில நாட்களுக்கு முன்பு இவர்கள் பயன்படுத்தி வந்த அரசு நிலத்தை அருகில் குடியிருக்கும் நபர்கள் முள்வேலி போட்டு அடைத்தனர். வெள்ளையம்மாளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை வந்தது. இதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதற்கு வந்த போது பாதை முள் மற்றும் கற்கள் போட்டு அடைக்கப்பட்டதால் ரோட்டிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் வெள்ளையம்மாள் படுத்திருந்த கட்டிலுடன் ஓடைப்பகுதியில் இறங்கி குடும்பத்தினர் தூக்கிச் சென்றனர்.

மேலும் இவரது மகள் ஸ்ரீ பிரியா நிறைமாத கர்ப்பணியாக உள்ளதால் அவருக்கும் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் இருவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement