பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்

3

செங்கல்பட்டு: '' திமுக ஆட்சிக்கு இனிமேல் வரப்போவது கிடையாது. ஆட்சியை விட்டு போகும் போதாவது, மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக இந்தாண்டு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.

அதிமுக லட்சியம்



செங்கல்பட்டு மாவட்டம், தையலூரில் பிரசாரம் மேற்கொண்ட இபிஎஸ் பேசியதாவது: தீயசக்தி திமுகவை வேரோடு அழிக்கத்தான் எம்ஜிஆர் கட்சி துவக்கினார். அதுவே அதிமுக லட்சியம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 5 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

அதிகரிக்கப்படும்



மத்திய அரசு, அதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அதிமுக அளித்த கோரிக்கைப்படி 100 நாள் வேலைநாட்களை மத்திய அரசு 125 ஆக அதிகரித்துள்ளது. திமுக , தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, 100 நாட்கள் வேலை திட்டத்தின் நாட்கள் அதிகரிக்கப்படவில்லை. முறையாக சம்பளம் வழங்கவில்லை. தொடர்ந்து வேலை வழங்கவில்லை.


அதிமுக ஆட்சிக்கு வந்தால் பணி நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளம் அதிகரிக்கப்படும். தடையில்லாமல் பணி வழங்கப்படும். அதிமுக அரசு தான் மக்களை காக்கும் அரசு.

மக்கள் வாழ்த்து





அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தோம். அப்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. இந்த ஆண்டாவது, ஆட்சி முடியும் நேரத்தில் மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். திமுக இனிமேல் ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்சியை விட்டு போகும் போதாவது மக்கள் வாழ்த்தட்டும்.

கடனாளி





அதிமுக ஆட்சியில் கோவிட் காலத்தில் அரசுக்கு வருமானம் இல்லாத போதும் விலைவாசி உயரவில்லை. மின்கட்டணம், வீட்டு வரி, தொழில் வரியை உயர்த்தவில்லை. இன்று வருமானம் அதிரிததுள்ளது. ஜிஎஸ்டி, பத்திரப்பதிவு, கலால் வரி உயர்ந்து வருமானம் அதிகரித்த போதும் கடன் வாங்குகின்றனர். நான் உட்பட நம்மை கடன்காரர்களாக ஆக்கியது தான் ஸ்டாலினின் சாதனை. கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம். 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி கடனாளி ஆக்கியது தான் ஸ்டாலினின் சாதனை. இந்த அரசு தேவையா? எந்த திட்டமும் இல்லை. புது மாவட்டம் இல்லை. மருத்துவ கல்லூரி கொண்டு வரவில்லை. அறிவியல், சட்டக்கல்லூரி எதுவும் கொண்டு வரப்படவில்லை. எனவே, கடன் வாங்கிய பணம் எல்லாம் எங்கே போனது என மக்கள் கேட்கின்றனர்.

ஊழல் அரசு




டாஸ்மாக் மூலம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினர். இதன் மூலம் 22 ஆயிரம் கோடி மேலிடத்தக்கு சென்றது.
உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இரண்டு முறை அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஊழல் நிறைந்த அரசு திமுக அரசு.

பச்சைப்பொய்




அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. தற்போது தேர்தல் வரப்போவதால், கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இன்னும் வரவில்லை. அது பச்சைப்பொய். இளைஞர்கள், மக்களின் செல்வாக்கை திமுக அரசு இழந்துவிட்டது. இதனால் லேப்டாப் வழங்குவதாக கூறியுள்ளது. ஏமாற்றி ஓட்டு வாங்க இதனை அறிவித்துள்ளனர் இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement