உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

2

லக்னோ: உ.பி.,யில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் பட்டியலில் இருந்து 2.89 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


உத்தர பிரதேசத்தில் கடந்த நவ.,4ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது. பிறகு, டிச., 26 வரை இந்தப் பணியை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


இந்த பணி துவங்குவதற்கு முன்னர், வாக்காளர் பட்டியலில், 15,44,00,000 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்தப் பணி முடிந்த நிலையில், 12,55,56,000 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் எனவும், மொத்தம், 2,88,75,000 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 18.70 சதவீத வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.


நீக்கப்பட்ட வாக்காளர்களில் சுமார் ஒரு கோடி பேர் எங்கு இருக்கின்றனர் என கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் இடம்பெற விரும்பினால் விண்ணப்பம் 6 ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலும் லக்னோ, காசியாபாத், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் நகரங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Advertisement