கவனத்தை ஈர்க்கும் கடன் பத்திரங்கள் ரூ.10,000 கூட முதலீடு செய்யலாம்

பங்குகள், தங்கம், வெள்ளி மட்டுமின்றி, பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தரும் கடன் பத்திரங்கள் பக்கமும் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் திரும்பியுள்ளது.


இந்நிலையில், கடன் பத்திரங்களை எப்படி வாங்குவது என்பது உள்ளிட்ட தகவல்களை விளக்கமாக எடுத்துரைக்கிறார், 'ஓரியன்டல் வெல்த்வைஸ்' நிறுவனர் சித்ரா நாகப்பன்.


கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களின் சந்தை மும்மடங்காக வளர்ந்திருக்கிறது. 2015ம் ஆண்டில், 17.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்திய கடன் பத்திர சந்தை, தற்போது 53.60 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது என்கிறது, மத்திய அரசின் நிடி ஆயோக் அறிக்கை.


இது, ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீத வளர்ச்சி என்பதோடு மட்டுமல்லாமல், மொத்த ஜி.டி.பி., யில் 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. அவரவர் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்றவாறு இவற்றில் முதலீடு செய்யலாம்.

அரசு கடன் பத்திரங்கள்



மத்திய - மாநில அரசுகள் வெளியிடக்கூடிய கடன் பத்திரங்கள் முழுக்க முழுக்க பாதுகாப்பானதாக இருந்தாலும், வட்டி 7 சதவீதத்துக்குள் தான் பெரும்பாலும் இருக்கும்.


அதோடு மட்டுமல்ல, முன்பெல்லாம் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்வோர் தான் இவற்றில் மு தலீடு செய்ய முடியும்.


ஆனால், இப்போது சிறு முதலீட்டாளர்களும் குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். இதற்காக, 'ஆர்.பி.ஐ., ரீடெய்ல் டைரக்ட்' எனும் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்கள் வந்துள்ளன. இவற்றின் வாயிலாக முதலீட்டை மேற்கொள்ளலாம்.


தனியார் கடன் பத்திரங்கள் தனியார் நிறுவனங்கள் வெளியிடக்கூடிய கடன் பத்திரங்கள் மீது அதிக வட்டி கிடைக்குமென்றாலும், ரிஸ்க்-கும் உண்டு என்பதை மறக்கக்கூடாது.


'செக்யூர்டு என்.சி.டி., மற்றும் அன் செக்யூர்டு என்.சி.டி.,' என இரு வகை உண்டு. செக்யூர்டு என்.சி.டி.,கள் பாதுகாப்பானவை என்றே சொல்லலாம். நிறுவனம் திவாலானால், சொத்துக்கள் விற்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணம் தரப்படும்.


அன் செக்யூர்டு என். சி.டி., கள் அதிக ரிஸ்க் உள்ளவை. நிறுவனம் திவாலானால், சொத்துக்களை விற்ற பணத்தில் கடன்களை அடைத்த பின், மீதம் இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்கும்.


எனவே, தனியார் நிறுவன பத்திரங்களுக்கு AAA அல்லது AA+ ரேட்டிங் இருந்தால் மட்டுமே முதலீடு செய்வது நல்லது.


இது, அரசு பத்திரங்களுக்கு இணையான பாதுகாப்பை தரும். இந்த தரக் குறியீடுகளை, கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனத்தின் சமீபத்திய நிதி நிலையை, 'கிரிசில், இக்ரா, கேர்' போன்ற ஆய்வு நிறுவனங்கள் ஆராய்ந்து வழங்குகின்றன.
Latest Tamil News

Advertisement