கேளுங்கள்: பாலிசி பத்திரம் தொலைந்துவிட்டால் பணம் திரும்ப கிடைக்குமா?
எல்.ஐ.சி., ஆயுள் காப்பீடு பாலிசி பத்திரம் தொலைந்துவிட்டது. பணம் செலுத்தியதற்கு, 11 மாதங்களுக்கான ரசீது மட்டுமே என்னிடம் தற்போது உள்ளது. எனக்கு பணம் திரும்பக் கிடைக்குமா?
உங்கள் ஆயுள் காப்பீடு பாலிசி பத்திரம் தொலைந்து போயிருந்தால், அதற்கான நகல் பாலிசி பத்திரம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக தெளிவான நடைமுறைகள் உள்ளன.
உங்கள் காப்பீட்டு நிறுவனம் இதற்கான வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல, அந்த பாலிசியை விற்ற முகவர் அல்லது தரகரும் உங்களுக்கு உதவுவர்.
பொதுவாக, பாலிசி தொலைந்தது குறித்து, காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் எப்.ஐ.ஆர்., ஈடு உத்தரவாத பத்திரம், பிரீமியம் செலுத்தியதற்கான சான்று, புதிய கே.ஒய்.சி., ஆவணங்கள் ஆகியவை தேவைப்படலாம். கட்டணமும் இருக்கலாம்.
இந்த நடைமுறைகள் முடிந்த பிறகு, அந்த பாலிசியை பற்றி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
பாலிசியின் முதிர்வு தேதி கடந்துவிட்டதா, இல்லையா, ஆயுள் காப்பீடு பெற்றவர் உயிருடன் உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது போன்ற சூழ்நிலைகளில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த பாலிசி பிரீமியங்களை முறையாக செலுத்தி செயலில் இருக்கிறதா? அல்லது முதிர்வு அல்லது மரணம் வரை தொடர்ச்சியாக நடைமுறையில் வைத்திருந்தார்களா என்பதை உறுதி செய்வதாகும்.
இந்த விபரங்கள் உறுதியாகிய பிறகு, பாலிசி தொடர்பாக எவ்வாறு செயல்படுவது என்பதை முடிவு செய்யலாம். முதிர்வு பெற்ற பாலிசி முறையாக செயலில் வைத்திருந்தால், பாலிசி தொகை மற்றும் போனஸ் (இருந்தால் ) உள்ளிட்ட முதிர்வு நன்மைகள் கிடைக்கும்.
ஆனால் பாலிசி செயலில் வைக்கப்படாமல் இருந்தால், அது 'பெயிட் அப் அல்லது லேப்ஸ்டு பாலிசி' என்ற நிலைக்குள் வரலாம். பெயிட் அப் பாலிசி சில நன்மைகளை வழங்கும்; ஆனால் லேப்ஸ்டு பாலிசி எந்த நன்மைகளையும் வழங்காது.
ஆயுள் காப்பீடு பெற்றவர் இறந்திருந்தால் மற்றும் மரண நாளில் பாலிசி செயலில் இருந்தால், மரண நன்மைகள் நாமினிக்கு வழங்கப்படும். பாலிசி செயலில் இல்லாத நிலையில் இருந்தால், அதற்கேற்ப பெயிட் அப் அல்லது லேப்ஸ்டு பாலிசிக்கான விதிமுறைகள் தான் பொருந்தும்.
எனவே, நகல் பாலிசி பத்திரம் பெறுவதற்கான விண்ணப்பத்தை உடனடியாகச் செய்யுங்கள். ஏனெனில், உங்கள் பாலிசி பத்திரம் வேறு யாரிடமாவது இருந்தால், உங்கள் விபரங்களை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்தல் அல்லது தவறான பயன்பாடு நடைபெறும் அபாயம் உள்ளது.
'ஜன் சுரக்ஷா' பாலிசி குறித்து செய்தித் தாளில் பார்த்தேன். இத்திட்டத்தில், என் தந்தையை காப்பீடு எடுக்க விரும்புகிறேன். எப்படி சேர்வது, இதற்கு தகுதி உள்ளிட்ட விபரங்களை கூறுங்கள்.
நீங்கள் இணைத்துள்ள விளம்பரத்தில், 'ஜன் சுரக்ஷா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை குறிக்கும் சொல். இதில், ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இதில் முக்கியமானது பிரதமரின், 'ஜீவன் ஜ்யோதி பீமா யோஜனா'. இது ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம். இதில் 2 லட்சம் ரூபாய்க்கு மரண காப்பீடு வழங்கப்படுகிறது.
18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள், ஆதார் இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது அஞ்சலகங்கள் வாயிலாக, ஒரு பக்க எளிய விண்ணப்பப் படிவத்தை நிரப்பி சேரலாம். இதற்கான ஆண்டு பிரீமியம் 436 ரூபாய்.
இந்த தொகை, ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில், அதே வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படும்.
ஜன் சுரக்ஷா திட்டத்தின் கீழ் வரும் மற்றொரு காப்பீடு, பிரதமரின் 'சுரக்ஷா பீமா யோஜனா'. இது கூட ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டம். இதில் விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனமுற்ற நிலை ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். சேரும் நடைமுறையும் மேலே கூறியதுபோலவே எளிமையானது. இதற்கான ஆண்டு பிரீமியம் வெறும் 20 ரூபாய் மட்டுமே.
மற்றொரு காப்பீட்டு திட்டமான 'அடல் பென்ஷன் யோஜனா' என்பது 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம். இதில் 60 வயதுக்குப் பிறகு, மாதந்தோறும் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்திற்கான பிரீமியம், நீங்கள் சேரும் வயது மற்றும் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதிய தொகை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதில் சேருவதும், பிரீமியம் செலுத்துவதும் முன்பு கூறிய அதே வங்கி அல்லது அஞ்சலக நடைமுறையிலேயே நடைபெறும்.
மேலும்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
-
சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்