பச்சிளம் குழந்தை சிகிச்சைக்கு 'ஜீரோ டிராபிக்' வசதி
கொப்பால்: பிறக்கும் போதே குடல் வெளியே வந்து அபாயகரமான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தை, 'ஜீரோ டிராபிக்' வசதியுடன் ஹூப்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கொப்பால் மாவட்டம், குகனுாரு தாலுகாவின் குத்துாரா கிராமத்தில் வசிப்பவர் மல்லப்பா. இவரது மனைவி விஜயலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால், குகனுாரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு, 10:00 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் குடல் வெளியே வந்திருந்தது. குழந்தைக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது நேரிட்டது. சிறு நீரக பிரச்னையும் இருந்தது. எனவே, குழந்தையை ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவனைக்கு அழைத்து செல்லும்படி, டாக்டர்கள் கூறினர். அதன்பின், ஐந்து ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை ஹூப்பள்ளிக்கு குழந்தை மற்றும் தாயுடன் அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக போலீசாரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல், 'ஜீரோ டிராபிக்' வசதி ஏற்படுத்தி தந்தனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரகாஷ், கொப்பாலில் இருந்து, 110 கி.மீ., தொலைவில் உள்ள ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு, அதிவேகமாக அழைத்து வந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.