பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி

3



புதுடில்லி: ஒடிசா கடற்கரையில், பிரளய் ஏவுகணையை ஏவி மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.


ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் இருந்து, இன்று காலை 10:30 மணிக்கு இரண்டு பிரளய் ஏவுகணைகள் சோதனை முயற்சியாக ஏவுப்பட்டன. ஒரே ஏவுதளத்தில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ஏவுகணைகள், குறிப்பிட்ட பாதையில் பறந்து சென்று இலக்குகளை தாக்கின.


இது தொடர்பாக டிஆர்டிஓ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து இரண்டு பிரளய் ஏவுகணைகள் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. செயல்திறன் மதிப்பீடு செய்வதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்தது. இரண்டு ஏவுகணைகளும் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தது.
இவ்வாறு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.


உள்நாட்டு தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, துல்லியம் மற்றும் அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது பல வகையான அணுஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது.

இந்த ஏவுகணையை ஐதராபாத்தில் உள்ள இமாரத் ஆராய்ச்சி மையம் மற்றும் டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன. ஒடிசாவில் இன்று நடந்த சோதனையை டிஆர்டிஓ விஞ்ஞானிகள், விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு, விமானப்படை, டிஆர்டிஓ, ராணுவத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று நடந்த சோதனை மூலம், ஏவுகணையின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement