நவி மும்பை விமான நிலையத்தில் நெட்வொர்க் சேவை வழங்குவதில் மோதல்

புதுடில்லி: நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில், தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்புக்கும், விமான நிலைய நிர்வாகமான அதானி குழுமத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த பிரச்னை காரணமாக, விமான நிலையத்தில் பயணியர் டவர் கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறையின் தலையீட்டை, தொலைத்தொடர்பு கூட்டமைப்பு கோரிஉள்ளது.

டெலிகாம் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு (ஏர்டெல், ஜியோ, வோடபோன்) விமான நிலையத்திற்குள் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க, எங்களது சொந்த நெட்வொர்க் கட்டமைப்புகளை நிறுவ, விமான நிலைய நிர்வாகம் அனுமதி மறுக்கிறது.

விமான நிலையம் அமைத்துள்ள பொதுவான கட்டமைப்பையே பயன்படுத்த வற்புறுத்துவதோடு, இதற்காக ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் மாதந்தோறும் 92 லட்சம் ரூபாய் கட்டணம் கோரப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தையும் சேர்த்து, நான்கு நிறுவனங்களும் ஆண்டுக்கு மொத்தம் 44.16 கோடி ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். விமான நிலைய நிர்வாகமே பிரத்யேக உரிமையை எடுத்துக்கொண்டு, ஏகபோகமாகச் செயல்படுவது, 2023ம் ஆண்டின் தொலைத்தொடர்புச் சட்டத்துக்கு எதிரானது.

நவி மும்பை விமான நிலையத்தின் பதில் (அதானி குழுமம்) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. ஏற்கனவே அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல்., நிறுவனம், விமான நிலையத்தின் பொது கட்டமைப்பில் தனது சோதனைகளைத் துவங்கிவிட்டது. பயணியர் அதிகம் வராத பகுதிகளையும் உள்ளடக்கி, பாதுகாப்பான மற்றும் சீரான சேவையை வழங்கவே பொதுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டண விவகாரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டுச் சதி செய்கின்றன. இதற்கு நாங்கள் பணியமாட்டோம்.

நிறுவனங்களிடம் தனித்தனியாகப் பேச்சு நடத்தத் தயார்; அதுவரை பயணியருக்கு இலவச வை - பை வசதி வழங்கப்படும்.

Advertisement