'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நிறுத்தியதாக சீனா டுபாக்கூர்! அப்பட்டமான பொய் என இந்தியா திட்டவட்ட மறுப்பு

8

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், 'இல்லை, நாங்கள் தான் நிறுத்தினோம்' என, சீனா கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.


ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஆண்டு ஏப்ரலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்; இதில் 26 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம் ஆயுத பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.


இதற்கு பதிலடியாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தானுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.


நோபல் பரிசு



பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் ராணுவ தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை பிரம்மோஸ் ஏவுகணை மூலம் நம் விமானப் படை தாக்கியது.

இதில், பாகிஸ்தானின் நுார் கான், ஷோர்கோட் உள்ளிட்ட முக்கிய விமான தளங்கள் பெரும் சேதமடைந்தன. இதை சமீபத்தில் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டது. இதனால் கடும் சேதத்தை சந்தித்த பாகிஸ்தான், விமானப்படையின் செயல்பாட்டை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே சண்டையை நிறுத்தும் முடிவுக்கு வந்தனர்.


இதையடுத்து, மே 10 அன்று, பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் மூலம் இந்திய ராணுவ இயக்குநரை தொடர்பு கொண்டு, சண்டை நிறுத்தம் கோரினார். இந்தியா தன் இலக்குகளை அடைந்துவிட்ட நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.


இந்த சண்டையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் தலையிட்டு நிறுத்தியதாக கூறி வருகிறார். 'வர்த்தக தடை விதிப்போம்' என இரு நாடுகளிடமும் கூறி சண்டையை நிறுத்தியதாக இதுவரை 70 முறை கூறியுள்ளார். அதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.


போர் நிறுத்தம்




ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ பங்கேற்று பேசினார். அப்போது, “சர்வதேச அளவில் 2025ல் பல பிரச்னைகள் எழுந்தன. நீடித்த அமைதியை உருவாக்க இந்த பிரச்னைகளை நடுநிலையாக அணுகினோம்.


“அதன்படி மியான்மர், ஈரான், பாகிஸ்தான்- - இந்தியா இடையிலான பதற்றம், பாலஸ்தீனம் - -இஸ்ரேல் பிரச்னை, கம்போடியா - -தாய்லாந்து மோதல் உள்ளிட்டவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்,” என்றார்.

அவரது கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:

ஆப்பரேஷன் சிந்துாரின் போது எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் தரப்பில் இருந்து நம் ராணுவ இயக்குநரை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் கோரப்பட்டது.

இந்தியா தொடர்பான பிரச்னையில், மூன்றாம் தரப்பு தலையீட்டை அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு எப்போதும் தெளிவாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement