ஸ்டீல் பொருட்கள் இறக்குமதி 3 ஆண்டுகளுக்கு வரி விதிப்பு

புதுடில்லி: சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலிவு விலை ஸ்டீல் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், குறிப்பிட்ட சில ஸ்டீல் பொருட்களின் மீது மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக ஸ்டீல் பொருட்களின் இறக்குமதி திடீரென அதிகரித்துள்ளதாகவும், இதனால் உள்நாட்டு தொழில்துறையினர் பாதிக்கப்படுவதாகவும், டி.ஜி.டி.ஆர்., எனும் வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இவற்றின் மீது மூன்று ஆண்டுகளுக்கு வரி விதிக்க பரிந்துரை வழங்கியது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில், குறைந்த தரத்தில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நிதியமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி, சீனா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில வகை ஸ்டீல் பொருட்களுக்கு 12 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆண்டில் 12 சதவீதம், இரண்டாம் ஆண்டில் 11.50 சதவீதம், மூன்றாம் ஆண்டில் 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' உள்ளிட்ட 'ஸ்பெஷாலிட்டி ஸ்டீல்' பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து நாடுகளின் ஸ்டீல் பொருட்களின் மீதும் 50 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து, சீன ஸ்டீல் பிற நாடுகளில் குவிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை கட்டுப்படுத்த தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகள் ஏற்கனவே பொருட்குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளன.

Advertisement