கடல் மட்ட உயர்வுக்கு புதிய அச்சுறுத்தல்!

கி ரீன்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, '79 டிகிரி என்' என்ற பனியாற்றின் மேற்பரப்பில் பல தசாப்தங்களாகத் தேங்கியிருந்த பிரம்மாண்டமான ஏரிகள், புவி வெப்பமயமாதலால் திடீரென உடைந்து உட்புறமாகப் பாய்வதை விஞ்ஞானிகள் தற்போது உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

ஆல்பிரட் வெஜினர் நிறுவன ஆய்வாளர்கள், செயற்கைக்கோள் மற்றும் வான்வழித் தரவுகள் மூலம் மேற்கொண்ட விரிவான ஆய்வில், இப்பனிநீர் பனியாற்றின் அடிப்பகுதி வரை ஊடுருவி, பனிப்பாறைகளை அடியில் இருந்து துாக்கிச் சிதைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது பனியாற்றின் மறைந்திருக்கும் நீர் விநியோகக் கட்டமைப்பை வெளிப்படுத்துவதோடு, ஒரு புதிய நிலையற்ற தன்மையை நோக்கி பனிப்பாறைகள் நகர்வதையும் காட்டுகிறது. 1995 முதல் ஏழு முறை இத்தகைய தீவிர நீர் வெளியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன; இதில் நான்கு நிகழ்வுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பதிவாகியுள்ளது. பத்து மீட்டர் அகலமுள்ள ஆழமான விரிசல்கள் பல ஆண்டுகள் நீடிப்பது, உருகும் பனிநீர் ஊடுருவ நிரந்தரப் பாதைகளை உண்டாக்குகின்றன.

'தி கிரையோஸ்பியர்' இதழில் வெளியான இந்த ஆய்வு, இத்தகைய உட்புற நீர் வழிகள் பனி உருகுவதைத் துரிதப்படுத்தி, கடல் நீர்மட்ட உயர்வுக்கு வித்திடும் என எச்சரிக்கிறது.

Advertisement