இழந்த புலன்களை மீட்டெடுக்கும் 'நியூரோ-கீ!'

நா ர்த்வெஸ்டர்ன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் 'நியூரோ-கீ' (Neuro-key) எனப்படும் புரட்சிகரமான, சிறிய அளவிலான, கம்பியில்லா மூளை உள்வைப்புக் கருவியைக் கண்டறிந்துள்ளனர்.

இது ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்தி, பெருமூளைப் புறணியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, இழந்த பார்வை, கேட்டல் மற்றும் தொடு உணர்வுகளை மீண்டும் மீட்டெடுக்கும் திறன் கொண்டது.

மூளைக்குள் ஊசிகளைப் போன்ற மின்முனைகளைச் செலுத்தும் வழக்கமான நரம்பியல் சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக, இது மண்டையோட்டின் கீழ் மென்மையாக அமர்ந்து கொண்டு, எலும்பின் வழியாகவே ஒளிகளைப் பாய்ச்சி நரம்பணுக் களைத் துாண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்வை மற்றும் கேட்டல் திறன் பாதிக்கப்பட்ட எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ஒளி சமிக்ஞைகளை மூளை அர்த்தமுள்ள தகவல்களாகப் புரிந்துகொண்டு செயலாற்றியது உறுதிசெய்யப்பட்டது.

சேதமடைந்த நரம்புப் பாதைகளைத் தவிர்த்து, தேவையான தகவல்களை நேரடியாக மூளைக்குக் கடத்தும் இத் தொழில்நுட்பம் நரம்பியல் மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாகும்.

'நேச்சர் நியூரோசயின்ஸ்' இதழில் வெளியான இந்த ஆய்வு, மனிதப் பயன் பாட்டிற்கு வர இன்னும் நீண்ட காலம் மற்றும் பல கட்ட சோதனைகள் தேவைப்பட்டாலும், எதிர்காலச் செயற்கை உறுப்புகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்குப் புதிய வாசலைத் திறந்துவிட்டுள்ளது.

இதன் வாயிலாகப் பார்வையற்றவர்கள் காணவும், செவித்திறன் குறைந்தவர்கள் ஒலியைக் கேட்கவும் வாய்ப்புள்ளதாக அறிவியல் உலகம் பெரும் எதிர்பார்ப்புடன் கருதுகிறது.

Advertisement