நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில் வி.சி.,யில் 48 மா.செ.,க்கள் மாற்றம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில், நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில், 48 மாவட்டச் செயலர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

இக்கட்சியில், சட்டசபை தொகுதிவாரியாக மாவட்டச் செயலர்கள், லோக்சபா தொகுதிவாரியாக மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் ஓரிரு மாவட்டங்களை இணைத்து, மாநிலச் செயலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக, 39 மண்டலப் பொறுப்பாளர்கள், 144 மாவட்டச் செயலர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 6ல் நியமிக்கப்பட்டனர். அதில், சில மாவட்டச் செயலர்கள் நியமனத்திற்கு கட்சிக்குள்ளேயே பிரச்னை எழுந்ததால், மறுசீரமைப்பு இருக்கும் என அக்கட்சி தலைமை தெரிவித்தது.

இந்நிலையில், வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவட்டச் செயலர்கள் 144 பேர் அறிவிக்கப்பட்டதில், ஒன்பது பேர் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், 48 பேர் மாவட்டச் செயலர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். மற்ற 96 மாவட்டச் செயலர்களின் பதவிக்காலம், 2026 ஜூலை மாதத்துடன் முடிவடையும்.

அதன்பின், நியமன முறையில் இல்லாமல், தேர்தல் முறையில் மாவட்டச் செயலர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மற்ற 138 தொகுதிகளுக்கான மாவட்டச் செயலர்கள், 2028 வரை பணியில் இருப்பர். இவர்களுக்கு, அதன்பின் தான் தேர்தல் நடக்கும். இத்தேர்தல், இரண்டு கட்டமாக நடக்கும். இனி நியமன முறை இருக்காது.

புதிதாக நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகளில், இளம் தலைமுறையினர், பெண்கள், மாற்று சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். புதுச்சேரி மாநிலத்திற்கு முதன்மை செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். இதற்கான பட்டியல், நாளை மறுதினம் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement