குறியீட்டுக்கு குறைவாகவே கடன் வாங்கினோம்: சிவசங்கர்

அரியலுார்: ''தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது இயல்பான ஒன்று தான்,'' என, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

பொங்கல் பண்டிகைக்கு பயணியர் எவ்வித சிரமமுமின்றி பயணிக்க ஏதுவாக பஸ்களை இயக்க போக்குவரத்து துறை தயாராகி வருகிறது.

கூடுதல் பஸ் வசதி தேவைப்படும் இடங்களில் தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் என பழனிசாமி சொல்லியிருப்பது, ஒரு முதல்வராக இருந்த அவருக்கு அடிப்படை விஷயம்கூட தெரியாமல் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அவரது காலத்திலும், அவருக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலும் கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் சக்தி எந்த அளவு உள்ளது, எவ்வளவு கடன் வாங்கலாம் என மத்திய அரசு குறியீடு வெளியிட்டுள்ளது.

நாம் அந்த குறியீட்டுக்கு குறைவாகத்தான் கடன் வாங்கியுள்ளோம். இவர்கள் ஒப்பிடும் பிற மாநிலங்கள் எல்லாம் அந்த குறியீட்டை தாண்டி தான் கடன் வாங்கி உள்ளன. அதிக போக்குவரத்து கட்டமைப்பு எங்கு உள்ளது என இந்தியா முழுதும் சுற்றி பார்த்தவர்களுக்கு தெரியும்.

தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது இயல்பான ஒன்று தான். அரசு பஸ்களில், ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் வைத்ததே கருணாநிதி தான். பயன்பாட்டுக்கு மிக நீளமாக இருக்கின்றது என்பதற்காக, அதை மாற்றியது ஜெயலலிதா தான்.

இவ்வாறு சிவசங்கர் கூறியுள்ளார்.

Advertisement