ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே கோரிக்கை மனு முடித்து வைப்பு

கோவை: கரும்புக்கடை - சாரமேடு பகுதி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பினர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

கரும்புக்கடை - சாரமேடு ரோடு பகுதிகளில், 86, 62வது வார்டு களில் சாலை ஓரங்களிலும், பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 20 பகுதிகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கின்றன. அப்பகுதியில் இயங்கும் 4 பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பும், போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உருவாகிறது.

அப்பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எதிர்காலத்திலும் உருவாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டிச., 23ல் மாநகராட்சியில் மனு கொடுத்தோம். அதன் மீதான நடவடிக்கையை அறிய, மாநகராட்சி இணைய தளத்தில் சரிபார்த்தபோது, எங்களது புகாருடன் தொடர்பில்லாத, ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு பெட்டிக்கடை அகற்றிய புகைப்படத்தை பதிவேற்றி, எங்கள் புகார் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது உண்மைக்கு புறம்பானாது. நிர்வாக கடமை மீறலோடு, பொதுமக்களின் நம்பிக்கையை பாதிப்பதாக இருக்கிறது.

எங்களது மனுவில் கூறியுள்ள இடங்களை ஆய்வு செய்து, உரிய சட்ட விதிகளின் படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தவறாக முடிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கையை 15 நாட்களுக்குள் அறிக்கையாக தர வேண்டும்.

இவ்வாறு, கூறியுள்ளனர்.

Advertisement