கம்பம் அரசு மருத்துவமனை மேற்கு நுழைவு வாயில் மூடல்: மக்கள் அவதி
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையின் மேற்கு வாயில் கதவு பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான வெளிநோயாளிகளும், 200 க்கும் மேற்பட்டடோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது. ஒன்று மெயின் நுழைவு வாயிலாகவும், மற்றொன்று மேற்கு பக்கம் வாயிலும் உள்ளது. மேற்கு வாயில் அருகில் சீமாங் சென்டர் உள்ளதால் பெரும்பாலும் கர்ப்பிணிகள் அந்த நுழைவு வாயில் வழியாக மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் உடல்களை மேற்கு வாயில் வழியாக தான் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும். இந்த மேற்கு நுழைவு வாயில் சில நாட்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகம் திடீரென பூட்டியது.
இதனால் அவசர பேறு கால சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கு வாயில் கேட்டை திறக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.