பாகிஸ்தான் சிறைகளில் 257 இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்

1

புதுடில்லி: '' இந்தியாவைச் சேர்ந்த 58 மீனவர்கள் உட்பட 257 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்,'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2008 ம் ஆண்டில் தூதரக உதவி தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி, இரு நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கைதிகள் குறித்த தகவல்களை தூதரகம் வழிகள் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


பாகிஸ்தானைச் சேர்ந்த 391 சிவில் கைதிகள் மற்றும் 33 மீனவர்கள் இந்திய சிறைகளில் உள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் சிறைகளில் மீனவர்கள் 58 பேரும், 199 மற்ற பிரிவினரும் உள்ளனர்.சிவில் கைதிகள் மற்றும் மீனவர்கள் மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளோம்.


தண்டனை காலத்தை நிறைவு செய்த 167 இந்திய மீனவர்கள் மற்றும் சிவில் கைதிகளை உடனடியாக விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பும் பணிகளை துரிதப்படுத்தும்படி கேட்டுக் கொண்டு உள்ளோம். மேலும் அந்நாட்டு சிறையில் உள்ள 35 சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்கச் செய்வதையும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் வலியுறுத்தி உள்ளோம்.


மத்திய அரசின் முயற்சி காரணமாக 2013 முதல் இதுவரை , பாகிஸ்தான் சிறைகளில் இருந்து 2,661 மீனவர்கள் மற்றும் 71 அப்பாவிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 500 இந்திய மீனவர்கள் மற்றும் 13 கைதிகள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement