பக்திப் பரவசத்துடன் பிறந்த 2026
புதிய ஆண்டின் முதல் நாளை இறையருளுடன் தொடங்க வேண்டும் என்ற வேட்கையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. "கோவிந்தா... முருகா..." என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே, வண்ணமயமான அலங்காரங்களுடன் இறைவனைத் தரிசித்த மக்கள், நம்பிக்கையுடன் தங்கள் புத்தாண்டுப் பயணத்தைத் தொடங்கினர்.
சென்னை தி.நகரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானக் கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, எம்பெருமான் சீனிவாசனும், பத்மாவதி தாயாரும் மிகச்சிறப்பான பட்டாடைகள் மற்றும் ஆபரணங்கள் சூடி, 'திவ்ய அலங்காரத்தில்' எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏழுமலையானின் அந்தப் புன்னகை பூத்த முகத்தைக் கண்ட பக்தர்கள், மனநிறைவுடன் ஆண்டைத் தொடங்கினர்.
நாமக்கல்லில் உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி, இன்று தங்கக் கவசத்தில் ராஜகம்பீரமாகத் திருக்காட்சி தந்தார். அவருக்குக் கூடை கூடையாகப் பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. மலர் மலைகளுக்கு நடுவே மின்னிய அனுமனின் திருவுருவம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
சென்னையின் இதயப் பகுதியான வடபழநி ஆண்டவர் கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அதேபோல், திருச்செந்தூர் கடற்கரையோரம் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது. திரளான பக்தர்கள் காவடி ஏந்தியும், அலகுக் குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி செந்திலாண்டவனைத் தரிசித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வீற்றுள்ள ஸ்ரீ பொம்மி அம்மாள் சமேத குருமூர்த்தீஸ்வரர், இன்று குபேர அம்சமாக காட்சியளித்தார். பல லட்சக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சுவாமிக்குச் செய்யப்பட்ட அலங்காரம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
அதேபோல், சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்ரீ வர்ண விநாயகர், புத்தாண்டு விருந்தாக 21 வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்டு 'கனி விநாயகராக' காட்சியளித்தார். இந்த அரிய அலங்காரத்தைத் தரிசிக்க மக்கள் போட்டி போட்டுக்கொண்டு திரண்டனர்.
இப்படி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. ஆடம்பரமான அலங்காரங்கள் ஒருபுறம் இருந்தாலும், இறைவனின் சன்னதியில் மக்கள் சிந்திய பக்தி கண்ணீரும், அவர்களின் நம்பிக்கையும் 2026-ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு சுபிட்சமான ஆண்டாக அமையும் என்பதைப் பறைசாற்றியது.
-எல்.முருகராஜ்.
மேலும்
-
கலாசாரத்தை அழிக்கின்றனர்!
-
ஜப்பான் 6.0 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரிய பாதிப்பு இல்லை
-
ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்
-
யூரோவை கரன்சியாக ஏற்றது பல்கேரியா
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்தில் 40 பேர் பலி
-
அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்