பொங்கல் விழாவில் பங்கேற்க திருச்சி வருகிறார் அமித் ஷா

13


திருச்சி: ''திருச்சியில், வரும் 5ல் நடைபெறும் பொங்கல் விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார்,'' என, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி: தலை குனிந்துள்ள தமிழகத்தை தலை நிமிர்த்த வேண்டும் என்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், இரு மாதங்களுக்கு முன் பிரசார பயணத்தை துவங்கி, தமிழகம் முழுவதும் 52 மாவட்டங்களில் பயணத்தை செய்துள்ளார்.


இதன் நிறைவு நிகழ்ச்சி, வரும் 4ல் புதுக்கோட்டையில் நடக்கவுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். மறுநாள் காலை ஜனவரி 5ம் தேதி , திருச்சி, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், தமிழகத்தின் கலாசாரமாக இருக்கும் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில், 2,000 பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.


அன்றைய தினம், தமிழக பா.ஜ.,வின் உயர்மட்டக் குழு மற்றும் மையக் குழுவைச் சேர்ந்தோரை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைகளை அமித் ஷா குழுவினருக்கு வழங்க உள்ளார்.


புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், கூட்டணி கட்சித் தலைவரான பழனிசாமி பங்கேற்க வாய்ப்பில்லை. அவர் அன்றைய தினம், சேலத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும்.இவ்வாறு முருகானந்தம் கூறினார்.

Advertisement