ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி டெபாசிட் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

2

புதுடில்லி: ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான வின்சோ நிறுவனத்தின் ரூ.192 கோடி மதிப்பு டெபாசிட் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்தநடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.


இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து வின்சோ நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அந்த நிறுவனம் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பயனர்களை மென்பொருளுடன் விளையாட வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும், ஆன்லைன் விளையாட்டை மத்திய அரசு தடை செய்த பிறகு, பயனர்களுக்கு திருப்பித் தர வேண்டிய 43 கோடி ரூபாயை திருப்பித் தராமல் வங்கியில் வைத்து இருந்தது. இதனையடுத்து மோசடியில் கிடைத்ததாக கருதப்பட்ட 505 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியிருந்தனர்.


இந்நிலையில் இந்த பண மோசடி வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வின்சோ நிறுவனத்துடன் தொடர்புடைய ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணமோசடி தடுப்புச்சட்டத்தின்படி சட்டவிரோத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கிக் கணக்குகளிலும், பிக்சட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் இருந்த 192 கோடி ரூபாயை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement