பயணிகளின் வசதி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்; அஷ்வினி வைஷ்ணவ்

புதுடில்லி: ரயில்வேத்துறையை நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான போக்குவரத்தாக மாற்ற பிரதமர் மோடி தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


டில்லியில் கவுகாதி மற்றும் கோல்கட்டா இடையே இயக்கப்படும் தூங்கும் வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலை டில்லியில் ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.


அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; ரயில்வேத்துறையை முழுமையாக நவீனமயமாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இதன் ஒருபகுதி தான் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள். பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மற்றும் கவாச் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பு மற்றும் இருக்கைகள் பயணிகளின் வசதிக்காக, முற்றிலும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ரயில்வேத்துறையை நடுத்தர மற்றும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கான போக்குவரத்தாக மாற்ற பிரதமர் மோடி தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். இதை மனதில் கொண்டு, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கவுஹாத்தி மற்றும் கொல்கத்தாவுக்கு இடையே இயங்கும் இந்த ரயிலை பிரதமர் விரைவில் தொடங்கி வைப்பார். ரயில் இரு பக்கங்களிலிருந்தும் மாலை நேரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை சென்றடையும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement