தேர்தல் வருவதால் ஓய்வூதிய திட்டம்; திமுகவின் ஏமாற்று வேலை என்கிறார் நயினார்

14


திருச்சி: முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்ட அறிவிப்பு ஏமாற்று வேலை. தேர்தல் வருவதால் அறிவிப்பு வெளியிடு கிறார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்ட அறிவிப்பு ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்பொழுது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். திமுக அரசின் ஆயுட்காலம் முடிவடைய கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்?


நர்சுகள், துப்புரவு பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது? ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர் ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்பொழுது தமிழகத்திற்கு வந்தாலும் மாற்றத்தை உருவாக்கி விட்டு தான் செல்வார். அமித்ஷா வந்து சென்ற பிறகுதான் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியும். காங்கிரஸ் கட்சியில் நடப்பது உட்கட்சி பூசல் காங்கிரஸ் வேறு எங்கேயோ கூட்டணிக்கு செல்வதாக சொல்கிறார்கள். ஒரு கூட்டணி பற்றி நாம் ஏதும் உறுதியாக உடனடியாக ஏதும் சொல்ல முடியாது.


யார் முதல்வராக வருகிறார் என்பதை விட யார் முதல்வராக தொடரக்கூடாது என்பது தான் எங்களுக்கு முக்கியம். தற்போது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை நிச்சயமாக அப்புறப்படுத்த வேண்டும். நாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement