சவால் விட்டு மாட்டிக்கொண்ட வெனிசுலா அதிபர்: கேலி செய்து அமெரிக்கா வெளியிட்ட வீடியோ

9


வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, முன்பு ' நான் இங்கு தான் இருக்கிறேன். வந்து பிடித்துக் கொள்ளுங்கள்,' என வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அவரை பிடித்த நிலையில், அமெரிக்கா அதனை வைத்து கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. அந்நாட்டின் மூன்றாவது முறையாக நிக்கோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இந்த உலகில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் சப்ளை செய்வதாகவும் கடந்த 2020ம் ஆண்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். அவருக்கு எதிராக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரை கைது செய்ய உதவுவோருக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் 20 கோடி ரூபாயாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்ட நிலையில், இந்தத்தொகையை டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 415 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.


இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆவேசமாக பேசிய நிக்கோலஸ் மதுரோ, '' வந்து என்னை பிடித்துக் கொள்ளுங்கள் . நான் அதிபர் அலுவலகத்தில் காத்திருப்பேன். தாமதம் செய்யாதீர்கள். கோழைகளே,'' எனத் தெரிவித்து இருந்தார்.


தற்போது, அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து நாடு கடத்தி கொண்டு சென்றுள்ளது.


தற்போது, நிக்கோலஸ் மதுரோவை கிண்டல் செய்து வெள்ளை மாளிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.61 நொடிகள் பேசும் இந்த வீடியோவில், அமெரிக்காவை நிக்கோலஸ் மதுரோ கிண்டல் செய்யும் காட்சிகள், அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி அவரை பிடித்தது, மற்றும் இது குறித்து டிரம்ப் மீடியாக்களிடம் விளக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement