திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி

8


பல்லடம்: ''திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம், நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.


திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அவர் கூறியதாவது:திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த பின்னும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம், நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஹிந்துக்களுக்கு மட்டுமே விரோதமாக தி.மு.க., அரசு செயல்படுகிறது.


திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்பட்ட தோல்வியை ஈடு செய்ய, திருப்பூர் அருகே உள்ள குமரன் குன்று கோவிலை தி.மு.க., அரசு இடித்து தள்ளியது. முருகப்பெருமான் முதல்வருக்கு தக்க பாடம் புகட்டுவார். சமீபத்தில், திருப்பரங்குன்றம் அருகில், முதல்வர் ஸ்டாலின் பயணித்த காரின் டயர் வெடித்தது. அவர் அமர்ந்திருந்த சீட்டில் பாம்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.


இதெல்லாம் அவருக்கு எச்சரிக்கை மணி. முதல்வரின் மனைவி துர்கா, பயபக்தியுடன் சுவாமி கும்பிடுபவர். அவரது தெய்வபக்தி தான், முதல்வரை பாதுகாத்து வருகிறது. எங்கு வேண்டுமானாலும், சர்ச், மசூதி கட்டிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை இந்து முன்னணி கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement