பஞ்சாப்பில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; ஆளும் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் திருமண நிகழ்ச்சியின் போது ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமிர்தசரஸில் அமைந்துள்ள மேரிகோல்டு ரிசார்ட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், ஆம்ஆத்மி பஞ்சாயத்து தலைவர் ஜர்மல் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, ஆம்ஆத்மி எம்எல்ஏ சர்வன் சிங் துன்னும் அங்கிருந்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், ஏற்கனவே 3 முறை ஜர்மல் சிங்கை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக கூறினர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டறிந்து, கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மொஹாலியில் கபடி வீரர் கன்வர் திக்விஜய் சிங்,30, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement