அமெரிக்காவில் இந்தியப்பெண் குத்திக்கொலை; வாலிபருக்கு வலை

10


நியூயார்க்: அமெரிக்காவில் முன்னாள் ஆண் நண்பரின் வீட்டில் இந்திய இளம்பெண் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ஹோவர்ட் கவுண்டி போலீசார் கூறியதாவது; எல்லிகாட் சிட்டியைச் சேர்ந்த 'டேட்டா மற்றும் ஸ்ட்ராடெஜி அனலிஸ்ட்' வேலை செய்து வந்த நிகிதா கோடிசாலா,27, என்பவர் கடந்த புத்தாண்டு தினத்தில் இருந்து மாயமாகி இருந்தார். இந்த சூழலில் மேரிலேண்டில் உள்ள முன்னாள் ஆண் நண்பர் அர்ஜூன் சர்மா,26, என்பவரின் அப்பார்ட்மென்ட்டில் கத்திக்குத்து காயங்களுடன் நிகிதா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


கடந்த ஜனவரி 2ம் தேதி நிகிதாவை காணவில்லை என்று அர்ஜூன் சர்மா போலீஸில் புகார் அளித்த நிலையில், அவரது அப்பார்ட்மென்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நிகிதா கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். புகார் அளித்த தினத்திலேயே, அர்ஜூன் சர்மா இந்தியாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதனால், டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணியளவில் நிகிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


சட்ட அமலாக்கத்துறையின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற அர்ஜூன் சர்மாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, நிகிதா கோடிசாலாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட இந்தியத் தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisement