வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும்: வானிலை மையம் கணிப்பு

1


சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு இலங்கையின் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று (ஜனவரி 10) பிற்பகல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையை நோக்கி 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.


தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில், 410 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. 6 மணி நேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு இலங்கையின் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று (ஜனவரி 10) பிற்பகல் கரையை கடக்கும். தெற்கு கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.




தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement