சொத்து வாங்குவோர் பட்டா சரிபார்க்க புதிய வழிமுறை!

இன்றைய சூழலில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அனைத்து விஷயங்களையும் தீர விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சொத்து வாங்கிய பின் தான் இந்த பிரச்னை தெரியவந்தது என்று தவிப்போரை பார்க்க முடிகிறது.


நல்ல நிறுவனம் என்று நம்பி பணத்தை முதலீடு செய்தோம், சில மாதங்களில் அவர்களின் போக்கு வேறு மாதிரியாக உள்ளது என்று, பாதிக்கப்பட்டவர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது. இதில் பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் தான் தவறு செய்கின்றனர் என்பது தெரிய வருகிறது.


குறிப்பாக, புதிதாக சொத்து வாங்கும் போது பத்திரத்தின் உண்மை தன்மை, வில்லங்க சான்று பார்த்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர். இதற்கு மேல் கூடுதல் விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம் என்று யாராவது அறிவுரை வழங்கினால், நாம் சொத்து வாங்குவதில் பொறாமை ஏற்பட்டு இப்படி சொல்கின்றனரே என பலரும் நினைக்கின்றனர்.



நீங்கள் சொத்து வாங்குவதை தடுத்துவிட வேண்டும் என்று பிறர் நினைத்தால் அதை செயல்படுத்த ஆயிரம் வழிமுறைகள் உள்ளன. இதில், விற்பனைக்கு வரும் சொத்து மீது யார், என்ன சந்தேகம் எழுப்பினாலும் அது குறித்து தெளிவாக விசாரிக்க வேண்டியது அவசியம்.


சொத்தின் முந்தைய பரிமாற்றங்களை அறிய பதிவுத்துறையில் விண்ணப்பித்து வில்லங்க சான்று பெறுவது நல்லது. ஆனால், பட்டா விஷயத்தில் முந்தைய பரிமாற்றங்களை அறிய உரிய வழிமுறைகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.



சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அல்லது அவருக்கு முந்தைய உரிமையாளர் பெயரில் பட்டா இருந்தால் போதும் என்று மக்கள் நினைப்பதில் எந்த தவறும் இல்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.


இதில் அந்த சொத்து குறித்த பட்டாக்களில் இதுவரைநடந்த மாற்றங்கள் என்ன என்பது தொடர்பான விபரங்களை தொகுப்பாக அறிய முடியாது. இந்த குறையை போக்கும் வகையில் பத்திரத்தின் வில்லங்க சான்றிதழ் தொகுப்பு போன்று பட்டாவின் முந்தைய மாற்றங்களின் தொகுப்பு விபரத்தை அறிய புதிய வசதி வரவுள்ளது.


தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில் வருவாய் துறை இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. சர்வே எண் அடிப்படையில் சொத்துக்களின் முந்தைய பட்டா விபரங்களை தொகுத்து வழங்குவதற்கான புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது.


அலுவலர்கள் நிலையில் இது தற்போது சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த வசதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதனால், சொத்தின் முந்தைய பட்டா விபரங்களை ஆன்லைன் முறையில் மக்கள் எளிதாக அறியலாம் என்கின்றனர் வருவாய் துறை அலுவலர்கள்.

சொத்தின் உண்மை தன்மையை மேலும் தெளிவுபடுத்தும் வகையில், பத்திரத்தின் வில்லங்க சான்றிதழ் தொகுப்பு போன்று பட்டாவின் முந்தைய மாற்றங்களின் தொகுப்பு விபரத்தை அறிய புதிய வசதி வரவுள்ளது.

Advertisement