காவலில் கலக்கி வரும் 'சலுக்கி'!
''கால் தரையில் படுவதே தெரியாத அளவுக்கு மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் சீறி பாய்ந்து ஓடும் சலுக்கி, உங்களுடன் இருந்தால், எதிராளி நெருங்கவே முடியாது,'' என்கிறார் 'ப்ரீடர்' பேச்சிமுத்து.
கோவை, செல்வபுரத்தில் கென்னல் நடத்தி வரும் இவர் ப்ரீடரும் கூட. நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில் படு பிசியாக இருந்த இவர் செல்லமே பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:
உலகின் பழமையான வேட்டை நாயாக கருதப்படும் சலுக்கி, அரேபியாவை பூர்வீகமாக கொண்டது. அங்கு பாலைவனங்களில் ஓடுவதற்கு ஏற்ற வகையில், மெலிந்த தட்டையான உடல், நீளமான கால், கூரிய முகம் என, வித்தியாசமான உடலமைப்பை கொண்டுள்ளது. அதிவேக ஓடும் திறன் கொண்டிருப்பதால், வெளிநாடுகளில் நாய் பந்தயத்திற்கு சலுக்கியை பயன்படுத்துகின்றனர். இது மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் சீறி பாய்ந்து எதிராளியை பிடித்துவிடும். கூரிய பார்வைத்திறன் கொண்டிருப்பதால், இதன் கண்காணிப்பு வளையத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது.
பெரிய வீடு, தோட்டம் வைத்திருப்பவர்கள், பாதுகாவலுக்கு சலுக்கியை வாங்கலாம். செல்லப்பிராணியாக வளர்க்க முடிவெடுத்தால், வீட்டை சுற்றி குறைந்தபட்சம், 5 சென்ட் இடமாவது இருக்க வேண்டும். இது, சுறுசுறுப்பாக ஓடி கொண்டே இருக்கும். அதிகபட்சமாக 80 செ.மீ., உயரம், 25 கிலோ வரையிலான எடை கொண்டது. இது பார்ப்பதற்கு, நம் நாட்டு இனமான சிப்பிப்பாறை போலவே இருக்கும். ஆனால், சலுக்கியிடம் உள்ள தனித்துவமே உடல் முழுக்க மென்மையான முடிகளும், அதன் காது, வால் பகுதியில் மட்டும் அதிக முடி இருப்பது தான்.
இதன் திறன்களை மீட்டெடுக்க, வேறு இனங்களுக்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டதால் வந்தவை தான் ஹவுண்ட், பஸ்மி இன நாய்கள். இவ்வளவு திறன் கொண்டிருந்தாலும், குழந்தைகளுடன் விளையாடும் அளவுக்கு சாதுவானது. உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும். பராமரிப்புக்கு மெனக்கெடல் தேவையில்லை. ஆனால், அதிக இடப்பரப்பு இல்லாதவர்கள், இந்த ப்ரீடை தேர்வு செய்ய கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.