தெரு நாய்க்கடிக்கு நீதிபதிகளும் தப்பவில்லை: சுப்ரீம் கோர்ட் வேதனை

7

'தெரு நாய்க்கடி சம்பவங்களுக்கு நீதிபதிகள் கூட தப்பவில்லை' என, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.


தலை நகர் டில்லியில், தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது.


கடந்த விசாரணையின் போது, நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள், மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் இருந்து, தெரு நாய்களை உடனடியாக அப்புறப் படுத்தும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்ததுடன், தெரு நாய்க்கடி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அகர்வால் வாதிடுகையில், ''நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில அரசுகள் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

'பல்வேறு மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், அவற்றில் பிரதான பிரச்னைகள் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.

''மத்திய பிரதேசம், தமிழகம், உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதுவரை அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை,'' என்றார்.


இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:




தெரு நாய்களால், அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களில், ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்க்கடி காரணமாக, இரண்டு நீதிபதிகள் சாலை விபத்துகளை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக, இந்த நீதிமன்றத்தில் இருக்கும் யாரும் இதுவரை தெரு நாய்க்கடிக்கு ஆளாகவில்லை.


பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், தெருநாய்களால் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற இடங்களில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என, நாங்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தோம். இந்த விஷயத்தில் இன்னும் கூடுதலான விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

விசாரணை இன்றும் தொடர்கிறது.


@block_B@

தமிழக அரசுக்கு பாராட்டு

தெரு நாய்க்கடி வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், அசாம் போன்ற மாநிலங்களில் விலங்குகள் ரயில்வே வழித்தடங்களை கடக்கும் போது, ரயிலில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு தொடர்ந்து வருவதாக கவலை தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதிகள், 'வனவிலங்குகள் ரயில்வே வழித்தடங்களை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க, 'ஜியோ டேகிங்' மற்றும் 'இன்ப்ரா ரெட்' தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விலங்குகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து விபத்துகளை தடுக்க முடியும். இந்த நடைமுறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைந்துள்ளது' என, பாராட்டினர்.block_B

- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement