ஈரான் சிறைபிடித்த எண்ணெய் கப்பல்: இந்தியர்கள் 10 பேரின் நிலை என்ன?

3

புதுடில்லி: ஈரான் கடற்படையால் கடத்தல் குற்றச்சாட்டில் சிறை பிடிக்கப்பட்ட, 'வேலியன்ட் ரோர்' எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் உட்பட 10 பேரை, ஈரான் போலீசார் நேற்று முன்தினம் காவலில் அழைத்துச் சென்ற நிலையில், அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேற்கு ஆசிய நாடான ஈரான், 'வேலியன்ட் ரோர்' என்ற சரக்கு கப்பலை ஓமன் வளைகுடாவில் சிறைபிடித்தனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள தீவு நாடான அருபாவை சேர்ந்த இந்த கப்பலில் இந்தியா, வங்கதேசம், இலங்கையைச் சேர்ந்த மாலுமிகள், ஊழியர்கள் இருந்தனர்.

ரேடாரை அணைத்து வைத்திருந்தது, சரக்கு ஆவணங்கள் இல்லை போன்ற காரணங்களுக்காக 'வேலியன்ட் ரோர்' சரக்கு கப்பலை ஈரான் கடற்படையினர் டிசம்பர் 13ல் சிறை பிடித்தனர். ஆனால், உண்மையில் கப்பலில் மிகக் குறைந்த சல்பர் உடைய கச்சா எண்ணெய் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கப்பல், முதலில் ஜாஸ்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் பண்டார் அப்பாஸ் என்ற துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இந்தியர்கள் சிக்கியுள்ள தகவல் அறிந்ததும், ஈரானில் உள்ள நம் துாதரகம், அந்நாட்டு அரசை தொடர்பு கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டன. பொருளாதார நெருக்கடி காரணமாக ஈரானில் தீவிர போராட்டங்கள் நடப்பதால், பேச்சு நடத்தும் முயற்சிகள் தாமதமாகி உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் கப்பலில் மாலுமி மற்றும் துணை மாலுமிகளை மட்டும் விட்டுவிட்டு, 10 ஊழியர்களை அந்நாட்டு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை.

கப்பல் சிறை பிடிக்கப்பட்டு ஒரு மாதம் ஆவதால் அதிலுள்ள உணவு, எரிபொருளும் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது. செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த இந்திய ஊழியர்களின் உறவினர்கள் ஈரானில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement