உக்ரைன் மீது விடிய, விடிய 300 ட்ரோன்கள் வீசிய ரஷ்யா; மின்சாரம், அவசர சேவைகள் நிறுத்தி வைப்பு

1

கீவ்:உக்ரைனில் ரஷ்ய படைகள் விடிய, விடிய 300 ட்ரோன்களை ஏவி ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைனுக்கு, ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்த 4 ஆண்டு மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் சண்டை ஓயவில்லை. அமைதிக்கு தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி அறிவித்துவிட்ட போதிலும் தாக்குதலை நிறுத்துவதற்கு ரஷ்யா தயாராகவில்லை.

இந் நிலையில் உக்ரைனில் ரஷ்ய படையினர் விடிய, விடிய ஏவுகணைகளை ஏவி மீண்டும் கொடூர தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இடைவிடாத இரவு நேர தாக்குதல் மூலம் உக்ரைனை அழிக்கும் ரஷ்யா முயற்சிக்கு ஒவ்வொரு, உக்ரேனியர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கின்றனர் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை' தளபக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை;

நேற்றிரவு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யர்களால் கிட்டத்தட்ட 300 தாக்குதல் ட்ரோன்கள் ஏவப்பட்டன. தாக்குதலின் முக்கிய இலக்கு நமது எரிசக்தி உற்பத்தி வசதிகள் மற்றும் துணை மின்நிலையங்கள் ஆகும்.

துரதிர்ஷ்டவசமாக, குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. டினிப்ரோ, சைட்டோமிர், சபோரிஜியா, கீவ், ஒடேசா, சுமி, கார்கிவ் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன.

எந்த ராணுவ நோக்கமும் இல்லாமல், கொரோட்டிச்சில் உள்ள ஒரு தபால் அலவலகத்தில் ஏவுகணைகளை வீசி 4 பேரைக் கொன்றது. அவர்களின் குடும்பங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீவ் பிராந்தியத்தில் நிலைமை எளிதானது அல்ல. பல லட்சம் வீடுகள் தற்போது மின்சாரம் இல்லாமல் உள்ளன. அனைத்து அவசர சேவைகளும் களத்தில் உள்ளன. எப்போதும் போல, ரஷ்யா அழிக்க முயற்சிக்கும் இடமெல்லாம், உக்ரேனியர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கின்றனர்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட வினியோகங்களை விரைவுபடுத்துவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். குளிர் போரை வெல்ல உதவாது என்பதை ரஷ்யா கற்றுக்கொள்ள வேண்டும். உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

Advertisement